
மும்பை,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அடுத்த உத்தரவு வரும் வரை, பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைய கூடிய 25 விமான வழிகள் மூடப்பட்டு உள்ளன.
இதனால், இந்திய வான்வெளியை பயன்படுத்தி பறக்கும் வெளிநாட்டு விமானங்களும், பாகிஸ்தான் வான்வெளிக்கு செல்லாமல் நீண்ட வழிகளை பயன்படுத்தி, சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்லும்.
வெளிநாட்டு விமானங்கள் இந்திய வான்வெளி வழியே சென்று வெளியேறும்போது, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக, வேறு விமான வழிகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு நாட்டின் வான்வெளி வழியே பறந்து செல்லும்போது, அதன் விமான போக்குவரத்து கழகத்திற்கு விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும்.