இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி

5 hours ago 1

சென்னை,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவ படைகளுக்கு ஆதரவாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவத்திற்கு தமிழக மக்கள் சார்பில் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த பேரணி நடத்தப்படுகிறது.

சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் தலைமை அலுவலகமான டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கி போர் நினைவுச் சின்னம் வரை சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு இந்த பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், அமைச்சர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பை போற்றி, ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பேரணியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையில் இந்திய தேசிய கொடியை ஏந்தி பேரணியை வழிநடத்தி வருகிறார். வெயிலின் தாக்கம் காரணமாக பேரணியில் கலந்து கொள்வோருக்காக பல்வேறு இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article