
புதுடெல்லி,
அமெரிக்காவின் மியாமி நகரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு பெற்ற உச்சி மாநாடு ஒன்றில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் வாக்களிப்பவர்களின் சதவீதம் அதிகரிப்பதற்காக அமெரிக்கா சார்பில் சிறப்பு நிதியாக ரூ.181 கோடியை தருவது பற்றி பேசினார்.
இந்தியாவுக்கு இந்த தொகையை நாம் தர வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த முடிவு பற்றி கேள்வி எழுப்பியுள்ள டிரம்ப், அவர்கள், தங்களுக்கு வேண்டியவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முயற்சித்து உள்ளனர் என நான் நினைக்கிறேன் என பைடனை குறிப்பிட்டு பேசினார்.
இதுபற்றி இந்திய அரசாங்கத்திடம் நாம் தெரிவிக்க வேண்டும். இது முற்றிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது என்றும் பேசியுள்ளார்.
அமெரிக்க அரசாங்க திறனுக்கான துறையின் தலைவராக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். வீண் செலவை குறைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்ட இந்த துறையை சேர்ந்த அவருடைய குழு, அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி கழகம், இந்தியாவில் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ரூ.181 கோடி நிதியுதவியை வழங்கவுள்ளது என கண்டறிந்தது. இதனை தொடர்ந்து, இந்த நிதியுதவியை டிரம்ப் அரசு ரத்து செய்து உள்ளது.
இதேபோன்று, வங்காளதேசத்தின் அரசியல் நிலப்பரப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.251 கோடி நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது என்றும் கண்டறிந்தது. கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் அரசியல் ஸ்திர தன்மை ஏற்பட்டு, ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகினார். நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்த சூழலில், இந்தியாவை பற்றி குறிப்பிட்ட டிரம்ப், உலகளவில் நமக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. பின்னர் நாம் ஏன் இந்தியாவுக்கு பணம் தர வேண்டும்? இந்தியா மீதும், அதன் பிரதமர் மீதும் எனக்கு நிறைய மதிப்பு உள்ளது.
ஆனால், இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பது என்பது? இந்தியாவுக்கு? என கேள்வி எழுப்பிய டிரம்ப், அமெரிக்காவில் வாக்கு சதவீதம் எந்த அளவில் உள்ளது? என புளோரிடாவில் பேசும்போது டிரம்ப் நேற்று குறிப்பிட்டார். இந்த தகவல் வெளியானதும், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரசை கடுமையாக விமர்சித்து உள்ளது.
இந்தியாவின் தேர்தல் நடைமுறையில், நிச்சயம் வெளிநாட்டின் தலையீடு உள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது. யார் இதில் பயன் பெறுகின்றனர்? நிச்சயம் ஆளுங்கட்சி (பா.ஜ.க.) இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவரான அமித் மாளவியா கூறியுள்ளார்.
இதேபோன்று, இந்திய அமைப்புகளின் மீது வெளிநாட்டு அமைப்புகளால் திட்டமிட்ட ஊடுருவல் நடைபெறுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் இது உள்ளது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் என்பவரையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இவருடைய ஓபன் சொசைட்டி பவுண்டேசன் என்ற அமைப்பானது, உள்ளூர் அரசியலில் செல்வாக்கை செலுத்துகிறது என உலக அளவில் வலதுசாரி அரசியல் தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நபர் காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினருக்கு தெரிந்த கூட்டாளி. அவருடைய நடவடிக்கை நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி, மக்களவை தேர்தலுக்கு முன்பு பல்வேறு அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணியில் பங்கேற்று பேசியபோது வெளியான வீடியோக்களையும் பகிர்ந்து உள்ளார்.
இதனால், இந்திய தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கான சாத்தியம் பற்றி கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம், அரசியலில் பெரும் சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.