கொல்கத்தா,
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் சமீபத்தில், கைது செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அராஜகங்கள் நடந்து வருகின்றன. இந்து மத சாமியார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன.
இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என்ற தேச துரோக குற்றச்சாட்டையடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்துக்களின் கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களின் சொத்துகளுக்கு தீ வைத்தும், சிறுபான்மையினரின் சொத்துகளை சூறையாடியும் வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மத்திய வெளிவிவகார அமைச்சகம், இந்துக்களை பாதுகாக்கும்படி வங்காளதேச அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் மூவர்ண கொடி அவமதிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், வங்காளதேச நோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது என வடக்கு கொல்கத்தா மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதுபற்றி ஜே.என். ரே மருத்துவமனையை சேர்ந்த அதிகாரி சுப்ரான்ஷு பக்த் கூறும்போது, இந்தியாவுக்கு எதிராக புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக, வங்காளதேச நோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிக்க போவதில்லை. இன்று முதல் காலவரையின்றி சிகிச்சையளிக்கப்படாது என அதுபற்றி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.
அவர்கள் சுதந்திரம் பெறுவதில் இந்திய ஒரு முக்கிய பங்காற்றியது. இருந்தபோதிலும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் பார்க்கிறோம். மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவு தந்து, இதேபோன்ற முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.