
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அடுத்த 10 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி. கோப்பையை சொந்தமாக்கியுள்ளது. அத்துடன் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த வளர்ச்சிக்கு ஐ.பி.எல். முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அது ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற மனநிலையை இந்தியர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.பி.எல். வந்தது முதல் நம்மால் ஒரே சமயத்தில் 2 - 3 விதமான சர்வதேச அணிகளை களமிறக்க முடிகிறது. அந்த 3 அணிகளுமே போட்டியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். தற்சமயம் இந்தியா சிறந்த இடத்தில் உள்ளது. அவர்களுடைய வீரர்கள் நல்ல வகைப்படுத்தலைக் கொண்டுள்ளனர். அதற்கு ஐ.பி.எல். ஒரு முக்கிய காரணம்.
ஐ.பி.எல். நமது வீரர்களிடம் வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டு வந்துள்ளது. அதனால் நிறைய பொருளாதார ரீதியான பயன்கள் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி ஐ.பி.எல். அணிகள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான வசதிகளை செய்கின்றனர். அப்படி அடிப்படை வசதிகள் வளரும்போது விளையாட்டின் தரமும் தாமாக உயரும்.
ஆஸ்திரேலியா எவ்வாறு விளையாடுகிறது என்ற ஐடியாலஜி எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்வதற்கு ஓநாய் கூட்டங்களை போல் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐ.பி.எல். தொடரில் எனது முதல் வருடத்தில் கிளென் மெக்ராத்துடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பயிற்சிகளை செய்ததால் அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அது சிறந்த அணிகளுக்கு எதிராக அசத்துவதற்கான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது" என்று கூறினார்.