இந்தூர்: இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் வகையில் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீச்சு நடந்ததால், அப்போது ஏற்பட்ட பதற்றத்தை தடுக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்தப்பட்டது. துபாயில் நேற்றிரவு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐசிசி – 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அடுத்த மோவ் நகரில் இந்தியாவின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடும் போது, இரு பிரிவினர் இடையே திடீர் மோதல்கள் வெடித்தன. இரு குழுக்களிடையே தீ விபத்து மற்றும் கல் வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
நள்ளிரவு வரை பதற்றம் நீடித்ததால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறுகையில், ‘நேற்றிரவு நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாட மோவ் நகர் சந்தைப் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக சென்றனர். அவர்களின் ஊர்வலம் ஜமா மசூதி பகுதி வழியாகச் சென்றபோது, அவர்களை நோக்கி மற்றொரு குழுவினர் கற்களை வீசினர். அதனால் அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஜமா மசூதி பகுதியில் தொடங்கிய வன்முறை, மானெக் சவுக், சேவா மார்க், மார்க்கெட் சவுக் மற்றும் ராஜேஷ் மொஹல்லா வரை பரவியது. இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பது தெரியவில்லை. மோதலை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. போலீசார் தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்றார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இரு தரப்பினரிடையே நடந்த மோதலில், ஒரு கடை மற்றும் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன’ என்று கூறினர்.
தெலங்கானா, மகாராஷ்டிராவிலும் தடியடி;
மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகர் மட்டுமின்றி தெலங்கானாவின் ஐதராபாத், கரீம் நகரிலும், மகாராஷ்டிராவின் நாக்பூரிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மகாராஷ்டிராவின் நாக்பூரில் கிரிக்கெட் வெற்றியை சிலர் கொண்டாடிய போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அதேபோல் தெலங்கானாவின் ஐதராபாத் மற்றும் கரீம்நகரில் கிரிக்கெட் வெற்றியை சிலர் கொண்டாடிய போது, இருதரப்பு மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நேற்றிரவு முதல் சில இடங்களில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய கிரிக்கெட் அணி வெற்றி எதிரொலி; மத்திய பிரதேசத்தில் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீச்சு: நள்ளிரவில் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு appeared first on Dinakaran.