இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

14 hours ago 3

மயிலாடுதுறை,பிப்.10: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தராமல் புறக்கணித்த மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தை புறக்கணித்து மத்திய அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

குறிப்பாக புதிய ரயில்பாதைகள், இரட்டை வழித்தடமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்கள் எதற்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை. தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்துக்கு, முதல் அமைச்சர் கேட்டதை நிதிநிலை அறிக்கையில் கருத்தில் கொள்ளவில்லை. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கி, சமக்ரா சிக்சா அபியான் திட்டத்தை செயல்படுத்த வழங்க வேண்டிய நிதி என்று ஏராளமான நிதி பாக்கி வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு பட்ஜெட்டில் கருத்தில் கொள்ளவில்லை.

ஒட்டு மொத்தமாக பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ளதாக குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென மத்திய அரசின் பட்ஜெட்டை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்கள் கையில் எரிந்து கொண்டிருந்த பட்ஜெட் நகலை பறித்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவராமன், ராமன், கணபதி, வீரராஜ், கிருஷ்ணமூர்த்தி, மனோன்ராஜ், ராஜ்மோகன், தமிழ்மலர், சர்புதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article