மும்பை: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவித்ததையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதையடுத்து இந்திய அணி ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற உள்ளனர்.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய ஒருநாள் தொடரின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரோகித் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.
இதன் காரணமாக ரோகித் எதிர்வரும் 2027ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரையிலும் இந்திய அணி கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித்தின் ஃபார்ம் மற்றும் வயது காரணமாக அவரால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியுமா? என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான முயற்சியை பிசிசிஐ மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரோஹித் ஷர்மாவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post இந்திய ஒருநாள் அணியின் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் கேப்டனாகும் ஷுப்மன் கில்? appeared first on Dinakaran.