இந்திய அளவில் பிரபலம்... யார் இந்த வேடன்?

1 month ago 9

சென்னை,

சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த இளைஞர் இன்று இந்திய அளவில் பெரிய ரசிகர் கூடத்தையே உருவாகி இருக்கிறார். யார் இந்த வேடன்? என்பதை பார்ப்போம்

ஹரிந்தாஸ் முரளி என்ற பெயருடன் கேரளா மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் வேடன். இவரது தந்தை கேரளத்தை சேர்தவர் என்றும் தாய் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. திருச்சூர் ரெயில் நிலையம் அருகில் ஸ்வப்னபூமி பகுதிதான் இவர் வளர்ந்த இடம். இவர் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் பல ஒடுக்குமுறைகளை சந்தித்துள்ளார்.

சிறுவயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட இவர், கவிதை எழுதுவது, தமிழ் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது என தனது திறமையை வளர்த்திருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்த வேடன் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். அங்கும் தனது பாடல்கள் மூலம் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பின்னர் எடிட்டர் பி.அஜித்தின் அலுவலகத்தில் பணிக்கு சேர்த்தார். அங்கு, பல ராப் பாடகர்களின் பாடல் அறிமுகம் வேடனுக்கு கிடைக்க, அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.

அதன்பிறகு வேடன் தனது ஸ்டைலில் ராப் பாடல்களை எழுத தொடங்கியுள்ளார். முதலில் சுயாதீன ராப் பாடகராக தனது கெரியரை தொடங்கிய வேடன், கடந்த 2020-ம் ஆண்டு 'வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்' என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இதை இவரே எழுதி பாடினார். இதில் தான் கடந்து வந்த பாதை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பல்வேறு அரசியல் விஷயங்களை பேசியிருந்தார்.

இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலை வேடன் எழுதி பாடியுள்ளார். இதில் பழங்குடியினரின் போராட்டம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட வரிகள் பரவலாக கவனம் பெற்று வருகின்றன.

இன்னும் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வரும் வேடன், இன்னொரு பக்கம் அதே சுயாதீன இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

Read Entire Article