இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா

2 weeks ago 7

(1909 அக்டோபர் 30 – 1966 ஜனவரி 24)

இந்தியா அணு ஆயுதங்களையும், தற்சார்பான மின்னணுவியல் திட்டங்களையும் கொண்டதாக இன்று இருப்பதற்கு அடிகோலியவர், அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ‘இந்திய அணுக்கருவியலின் தந்தை’என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆவார். இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கியப் பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளரான இவர் 1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டில் இருந்த நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார்.

மேற்படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியலைத் தொடர விரும்பினார். பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்குப் புறப்பட்டார். 1930ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.

1935ல் துகள் மின் இயக்கவியலில் (Quantum Electro Dynamics) எலக்ட்ரான்- பாசிட்ரான் நுண்துகள்களிடையிலான கதிர்வீச்சுச் சிதறல் குறித்த பாபாவின் சிறப்பான ஆய்வறிக்கை ராயல் சொஸைட்டி இதழில் வெளியானது. பின்னாளில் அதற்கு ‘பாபா கதிர்வீச்சுச் சிதறல்’(Bhabha Scattering) என்று பெயரிடப்பட்டது.

1937ல் ஜெர்மனிநாட்டு விஞ்ஞானி ஹைட்லருடன் இணைந்து அவர் மேற்கொண்ட அண்டக்கதிர் (Cosmic rays) தொடர்பான ஆராய்ச்சி அவருக்கு மிகுந்த புகழைத் தந்தது. அவற்றில் ‘மேசான்’(Meson) எனப்படும் அடிப்படைத்துகள் இருப்பதை பாபா கண்டறிந்தார். 1939ல் பெங்களூருவில் இயங்கிய இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அப்போது தனக்குக் கிடைத்த டாடா நிறுவன ஆராய்ச்சி நிதியுதவியைக் கொண்டு, அண்டக்கதிர் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அணுக் கருவியலில் (Nuclear Physics) இந்தியாவின் தொடக்கத்துக்கான முதல் புள்ளி அதுவே. பிறகு நாட்டின் பெரும் செல்வந்தரான தொரப்ஜி ஜாம்ஷெட்ஜி டாடாவின் உதவியுடன் 1944ல் அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி நிறுவனத்தை (TIFR- Tata Institute of Fundamental Research) பாபா மும்பையில் நிறுவினார்.

1948ல் இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission of India) நிறுவப்பட்டபோது அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார் பாபா. டிராம்பே என்ற இடத்தில் வழங்கிய அரசு நிலத்தில் 1954ல் டிராம்பே அணு ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். அது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என்ற பெயரில் இயங்கிவருகிறது. இந்தியா உலக அரங்கில் பாதுகாப்புடன் விளங்க வேண்டுமானால் அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் பாபாதான். உலக அளவில் முக்கியமான அணுவியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்த பாபாவுக்கு 1954ல் பத்மபூஷண் விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியது. 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் பாபா மரணமடைந்தார்.

– சக்திவேல்

The post இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா appeared first on Dinakaran.

Read Entire Article