
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்த ஷர்துல் தாகூர் மீண்டும் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார். அதற்காக தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மும்பை அணி மீண்டும் ஒருமுறை அரையிறுதிக்கு செல்ல உதவியுள்ளார்.
அவரது இந்த செயல்பாட்டின் மூலம் மீண்டும் தேர்வுக்குழுவினரை தன் பக்கம் ஈர்துள்ளார். எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருப்பதாகவும், டெஸ்ட் அணியில் அஸ்வின் இடத்தை தான் நிரப்புவேன் என்றும் ஷர்துல் தாகூர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது, "தற்போது என்னுடைய தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு ஏதும் சிறப்பு இருக்காது. எனவே நிச்சயம் நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டிய ஊக்கம் அதிகரித்துள்ளது. தற்போதைய இந்திய அணியில் 7-வது மற்றும் 8-வது இடத்தில் பேட்டிங் தெரிந்த ஒரு பந்துவீச்சாளராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அதேபோன்று என்னாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் பேட்டிங்கிலும் என்னால் கை கொடுக்க முடியும்.
இந்திய அணியில் 3-வது அல்லது 4-வது வேகப்பந்து வீச்சாளராகவும் விளையாட தயாராக இருக்கிறேன். மும்பை அணியில் நான் முதன்மை பந்துவீச்சாளராக செயல்பட்டிருக்கிறேன். அதேபோன்று புதிய பந்து பழைய பந்து என எந்த பந்திலும் பந்துவீச தயாராக இருக்கிறேன்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது எனது பெயர் இடம்பெறாததில் ஏமாற்றம் இருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து நான் மீண்டு வந்து விட்டேன். எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவே தற்போது முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறேன்" என்று கூறினார்.