இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பும்ரா விலகல்: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்திக்கு இடம்

1 week ago 2

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் 19ம் தேதி முதல் மார்ச் 9ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள இந்தியா,ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிள் பங்கேற்கின்றன. இவை தலா 4 அணி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் வரும் 20ம் தேதி மோதுகிறது. தொடர்ந்து 23ம்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை 29ம்தேதி எதிர்கொள்கிறது. போட்டிகள் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் ஆடும் அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்திய அணியும் கடந்த 2 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முதுகில் வீக்கத்தால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவர் முழுமையாக குணமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர் காயத்தில் இருந்து குணமாகி அணிக்கு திரும்பும் காலக்கெடு குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

ஓரிரு வாரங்களில் அவர் மீண்டும் பயிற்சியை தொடங்குவார், அதன் பிறகு படிப்படியாக பந்துவீசுவார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவரது முன்னேற்றம் கண்காணிக்கப்படும்என பிசிசிஐ அறிவித்துள்ளது.பும்ரா விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். டி.20 உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 32 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றார். அவர் இல்லாததால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அனுபவ வீரர் முகமது ஷமி , வேகப்பந்துவீச்சுக்கு தலைமை தாங்குவார்.

பும்ராவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா 15பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி வீரர்கள் விபரம்;
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (வி.கீ), ரிஷப் பன்ட் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.
மாற்று வீரர்கள்;
யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. இவர்கள் 3பேரும் தேவைப்படும்போது துபாய்க்கு பயணம் செய்வர்.

பும்ரா தவறவிட்ட ஐசிசி தொடர்கள்;
* ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முதுகில் காயம்
* டி20 உலகக் கோப்பை 2021 அடி வயிறு பிரச்னை
* டி 20 உலகக் கோப்பை 2022 தண்டுவடத்தில் காயம்
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 தண்டுவடத்தில் காயம்

The post இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பும்ரா விலகல்: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் appeared first on Dinakaran.

Read Entire Article