சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி (திமுக) பேசுகையில், ராயபுரம் பம்பிங் ஸ்டேசன் ஏ – எப் வரையில் மொத்தம் 3,600 மீட்டர். அதில் 46% பணிகள் முடிந்து இருக்கிறது. மீதமுள்ள 54% பணிகள் இந்த மழைக்காலம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் அந்தப் பணிகளை விரைவில் முடித்து தர வேண்டும். 7ம் மாதத்தில் முடித்துத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 335 தெருக்கள் இருக்கின்றன. இப்போது மெயின் ரோட்டில் இந்த பைப் அமைத்து இணைக்கிறோம். தெருக்களில் உள்ள கழிவுநீர் குழாய் 40 வருடங்களாக பழமையானதாக இருக்கிறது.
அவைகள் 100 எம்எம் விட்டமும், 150 எம்எம் விட்டமும் உள்ள குழாய்களாக இருக்கிறது. அதேமாதிரி குடிநீர் குழாய்களும் பழமையானவையாக இருக்கின்றன. எனவே, குடிநீரும், கழிவுநீரும் கசிவு ஏற்படுகிறது. அவைகளை தினமும் பராமரிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. எனவே, கழிவுநீர் குழாய்களையும், குடிநீர் குழாய்களையும் சீர்செய்து தர வேண்டும்,’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், வடசென்னையில் இருக்கிற பழைய குடிநீர் குழாயாக இருந்தாலும் சரி, கழிவுநீர் அகற்றுகின்ற குழாயாக இருந்தாலும் சரி அது கிட்டத்தட்ட 50 ஆண்டு காலத்திற்கு மேற்பட்டிருக்கின்ற காரணத்தினால் அவைகள் அனைத்துமே மாற்றப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான், இப்போது முதல்வர் வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், ரூ.946.43 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு வடசென்னை பகுதியில் 47.22 லட்சம் மக்கள் பயனடைவர். எனவே, உறுப்பினர் குறிப்பிட்டு, உடனடியாக எங்கு செய்யப்பட வேண்டுமென்று சொன்னால், அந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துசெய்து கழிவுநீர் வழிந்தோடுவது தடுக்கப்படும், என்றார்.
* ஐட்ரீம் மூர்த்தி: குடிநீரை பொறுத்தவரையில் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்தில் இருந்து ராயபுரம் நீரேற்றும் நிலையத்திற்கு 25 எம்எல்டி குடிநீர் வந்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் அங்கே 17 எம்எல்டி குடிநீர் மட்டுமே பெறப்பட்டு, இதுவரை ராயபுரம் தொகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகை கணக்கை கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்னதாக கொடுக்கப்பட்ட 17 எம்எல்டி நீர் போதுமானதாக இல்லை. 25 எம்எல்டி நீரை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வழங்க வேண்டும்.
* அமைச்சர் கே.என்.நேரு: குடிநீர் தருவதைப்பற்றி எந்தவிதமான இடைஞ்சலும் இல்லை. உடனடியாக எவ்வளவு தண்ணீர் கேட்டாலும் கொடுக்கக்கூடிய அளவிற்குத்தான் சென்னை குடிநீர் வாரியம் இருந்து கொண்டிருக்கிறது. மொத்த குடிநீரின் கொள்ளளவு 13.22 டிஎம்சி இருக்க வேண்டும். ஆனால் இன்றைய தேதியில் 15.560.17 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. எனவே, தண்ணீர் இந்த ஆண்டு, 6வது மாதம் மற்றும் 7வது மாதம், ஏன் மழைப்பொழியும் வரை சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் அளவிற்கு அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
தேவையான அளவிற்கு தண்ணீரும் இருக்கின்றது. கடந்த ஆண்டின் இருப்பு என்று எடுத்து பார்த்தால் 10 டிஎம்சி, 11 டிஎம்சி தான் இருந்தது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக ஆறரை டிஎம்சி கூடுதலாக தான் இருந்து கொண்டிருக்கிறது. அந்தப் பகுதியில் குடிநீரை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். எந்தப் பகுதி என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து நம் அதிகாரிகளிடம் கலந்துபேசி உடனடியாக அந்தப் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
The post இந்தாண்டு ஆண்டு ஜூலை மாதம் வரை சென்னையில் குடிநீர் பிரச்னை இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.