இந்த வெற்றி ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கை தருகிறது: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

2 days ago 2

லக்னோ: ஐபிஎல் 2025 தொடரில் நேற்றிரவு லக்னோவில் நடந்த போட்டியில் லக்னோ-சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் அஸ்வின், கான்வே நீக்கப்பட்டு ஷேக் ரஷீத் மற்றும் ஜிம்மி ஓவர்டன் ஆகியோர் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி வீரர்கள் எய்டன் மார்க்ரம் 6 ரன், நிக்கோலஸ் பூரன் 8 ரன், மிட்செல் மார்ஸ் 30 ரன் ஆகியோர் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால் பெவிலியன் திரும்பினர்.

கேப்டன் ரிஷப் பன்ட் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். கடைசியில் ஆயுஷ் பதோனி 22 ரன், அப்துல் சமத் 20 ரன்கள் எடுக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து சிஎஸ்கே அணியில் புது தொடக்க ஜோடியாக விளையாடிய ஷேக் ரசித் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஷேக் ரசித் 19 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார்.

ராகுல் திரிபாதி 9 ரன்களில் ஆட்டம் இழந்து சொதப்பினார். ரச்சின் ரவீந்திரா தன் பங்குக்கு 37 ரன்கள் சேர்க்க ஜடேஜா 7 ரன், விஜய் சங்கர் 9 ரன்களில் பெவிலியன் திரும்ப சிஎஸ்கே அணி 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த சிவம் துபே, கேப்டன் டோனி ஆகியோர் பொறுப்பாக ஆடினர். டோனி தனது பழைய அதிரடியை காட்டினார். அவர் 11 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் சேர்த்தார். சிவம் துபேவும் 37 பந்தில் அவர் 43 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிவாகை சூடியது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 5 தோல்விகளுக்கு பிறகு 2வது வெற்றியை பெற்று, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. கேப்டன் டோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வெற்றி குறித்து டோனி கூறியதாவது:-இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பகட்ட போட்டிகளில் எங்களால் சரியாக விளையாட முடியவில்லை. அதுக்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தற்போது வெற்றி பெற்றிருப்பது ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கை தருகிறது. இதன் மூலம் எந்த விஷயங்களில் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதற்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் நாம் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் கடவுள் நமக்கு அனைத்தையும் கடினமாக மாற்றிவிடுவார். இன்றைய ஆட்டம் கூட எங்களுக்கு கடினமாக தான் இருந்தது.

நாங்கள் இந்த தொடரில் பவர் பிளேவில் மோசமாக ஆடினோம். பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை எங்களால் பெற முடியவில்லை. சில நேரங்களில் தவறான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விடுகின்றோம். இதெல்லாம் எங்கள் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. நாங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே ஆடும்போது எங்கள் அணியின் பேட்டிங் நன்றாகவே செயல்படுகிறது.

ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஷேக் ரசித் இன்று சிறப்பாக பேட்டிங் செய்தார். தற்போது அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருக்கிறது. இயல்பான கிரிக்கெட் ஷாட்களை ஆடியே அவர் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடியும். எனக்கு ஆட்டநாயகன் விருது ஏன் தருகிறார்கள் என்று தான் யோசித்தேன். ஏனென்றால் நூர் முகமது அபாரமாக பந்துவீசினார்.
இவ்வாறு டோனி கூறினார்.

The post இந்த வெற்றி ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கை தருகிறது: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article