இந்த வார விசேஷங்கள்!!

3 weeks ago 5

3.5.2025 சனி
முதலியாண்டான் திருநட்சத்திரம்

இராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்கள் சிலர் உண்டு. அதில் ஒருவர்தான் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் இராமானுசரின் மருமகன் ஆவார். சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்த மல்லிக்கு அருகில் பச்சை வர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (இராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இராமானுஜருக்கும் இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு. இதற்கு சாஸ்த்ரம், அருளிச் செயல், ரகசிய நூல்களின் ஸாரம் என சகல விஷயங்களையும் இராமானுஜரிடமே பயின்றார். இராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்றபொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். இராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

இராமானுஜரின் குரு பெரிய நம்பிகள். அவருடைய திருமகள் அத்துழாய். அத்துழாய்க்கு திருமணமானது. புகுந்த வீட்டுக்கு அனுப்பும் பொழுது, துணைக்கு ஒரு பணிப்பெண்ணை சீதனமாக அனுப்பும் பழக்கம் உண்டு. அப்படி சீதனமாக அனுப்பும் பணிப்பெண்ணுக்கு “சீதன வெள்ளாட்டி” என்று பெயர். பரம ஏழையான பெரிய நம்பியால், தன் பெண்ணுக்கு ஒரு பணிப் பெண்ணை துணைக்கு அனுப்ப முடியவில்லை. அதனால் அத்துழாய் தன் மாமியாரிடம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானாள். இதைத் தாங்க முடியாமல் ஒரு முறை, தன் தந்தை பெரிய நம்பிகளிடம், தன் குறையைச் சொல்ல, பெரிய நம்பிகள், ‘‘நீ இராமானுஜரிடம் சொல்” என்று சொல்ல, இராமானுஜர், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, தன் அருகில் இருந்த முதலியாண்டானை சீதன வெள்ளாட்டியாக அனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து ஆண்டான் எவ்வளவு உயர்ந்தவர் என்றும், ஆசார் யனின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் கட்டுப்பட்டவர் என்றும் நாம் தெரிந்துகொள்ள முடியும். வித்தை இருந்தால் வினயம் இருக்காது என்பார்கள். ஆனால், வித்தையும் அடக்கமும் ஒரே இடத்தில் இருந்தது என்று சொன்னால் அது முதலியாண்டானிடம் இருந்தது தமிழ் மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்புமிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று.

4.5.2025 ஞாயிறு
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் சூரியன் சித்திரை மாதம், மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார் என்று சொல்லப்படுகிறது. பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில்தான் என்பதால், இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 ல் தொடங்கி வைகாசி 15ல் முடிவடையும். அக்னி நட்சத்திரத்தின் போது, ​முருகன் கோயில்களில் பழனி, சுவாமிமலை, திருத்தணி, திருச்செந்தூர் மற்றும் பழமுதிர்சோலை போன்ற பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் சடங்குகள் நடத்தப்படுகின்றன. அக்னி நட்சத்திரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கலாம். தோஷநிவர்த்தி பூஜைகள், நவகிரக சாந்தி வழிபாடுகள், பூஜைகள் செய்யலாம். விசிறி, குடை, செருப்பு தானம் வழங்கலாம். எலுமிச்சை, தயிர் ஆகியவற்றை கோயில்களுக்கு தானம் வழங்கலாம். கிணறு வெட்டுவது கிரகப் பிரவேசம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

6.5. 2025 செவ்வாய்
மீனாட்சி சொக்கநாதர் பட்டாபிஷேகம்

சித்திரைத் திருவிழாவில்தான் மதுரை மீனாட்சி பட்டத்து அரசியாக முடிசூடி கொள்கின்றாள் .சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். சித்திரை 23ம் நாள்- மே 6 ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் விருச்சக லக்கனத்தில் பூர நட்சத்திரத்தில் அருள்மிகு மீனாட்சி யம்மனுக்கு அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் கொடுக்கப்படும்.பட்டாபிஷேகத்தின்போது, மீனாட்சி அம்மன் விதம்விதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, காட்சி தருவார்.

7.5.2025 புதன்
வாசவி ஜெயந்தி

சித்திரை மாத வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக பக்தர்கள் குறிப்பாக வைசிய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டுமென்றும், மாங்கல்ய பலம் வேண்டுமென்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர். சரி, யார் இந்த வாசவி? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.ஒருநாள் கயிலாயத்தில் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் நடனமாடினர். நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன்னை வணங்காமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி தேவி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.தன்னைச் சபித்ததால் பார்வதிமீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

அவர்கள் இருவரும், பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்குப் பிள்ளைகளாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர். வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றார்.பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க இரண்டு பிரிவாகப் பிரிந்தனர்.

இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, குடும்பத்தார் சண்டையிட்டு பிரிவதை நினைத்து வருந்தினாள். தன் உயிரைக் கொடுத்தாவது குலப் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள். அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைத்து அக்னிப் பிரவேசம் செய்தாள் வாசவி, ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள்.அந்த வாசவி அன்னையின் ஜெயந்திதான் இன்று கொண்டாடப்படுகிறது.

8.5.2025, வியாழன்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தேர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான திருத்தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.. வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேரில் காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள்வார் திருத்தேர் தேரடியிலிருந்து புறப்பட்டு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக காலை 9.15 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடையும்.

8.5.2025 வியாழன்
மோகினி ஏகாதசி

வசிஷ்டர் ராமருக்கு சொன்ன ஏகாதசி மோகினி ஏகாதசி. சீதையை பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம், (சித்திரை அமாவாசைக்கு மறுநாள் சாந்திரமான முறையில் வைகாசி மாதம் துவங்குகிறது) வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன் னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேரு வாள்” என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான ஸ்ரீராமபிரானே, முறையாக, வைகாசி ஏகாதசி விரதத்தில் இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு. செய்த பாவங்களுக்கு வருந்தி இந்த ஏகாதசி விரதம் இருந்தால், பாவம் தீரும் என்பது ஏகாதசியின் தத்துவம்.

8.5.2025 வியாழன்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்

சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி
சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு மேற்கு ஆடி வீதியில் உள்ள பிரம்மாண்ட திருக்கல்யாண மண்டபத்தில் சித்திரை 25 ம் நாள், மே 8 ஆம் தேதி வியாழக் கிழமை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறும். திருக்கல்யாண மேடை பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருக்கும். மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட உள்ளூர் ரகப் பூக்களும், பெங்களூரு ரோஸ், வெளிநாட்டிலிருந்து தாய்லாந்து ஆர்க்கிட் மற்றும் பல வண்ண மலர்கள் உள்பட சுமார் 10 டன் மலர்கள் அலங்காரத்திற்கு பயன் படுத்துவார்கள். பூக்கள் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஈடுபடுவர்… வாழை மரத் தோரணங்களும் கோயில் வளாகம் முழுவதும் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டிருக்கும். தேவாதி தேவர்களும் ரிஷிகளும் பங்கேற்கும் தெய்வத் திருவிழாவல்லவா இது. அத்தனைத் தெய்வங்களும் இந்தத் திருவிழாவுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூடுவதால் அன்றைக்குக் கோயிலுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பது முப்பத்து முக்கோடி தேவதைகளின் ஆசிகளையும் பெறுகின்ற நல்வாய்ப்பாக அமையும். வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்வுகள் தொடரும். சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார் அன்னை மீனாட்சியும் சுவாமியும் திருமணக் கோலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். திருக்கல்யாணத்தைப் பார்க்க வந்த பக்தர்கள் அனைவரும் தங்களின் திருமாங்கல்யத்தை மாற்றிக்கொள்ளும் நிகழ்வும் நடைபெறும். திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வரமுடியாத பக்தர்கள் அவர்களின் வீட்டிலேயே அந்த மங்கள நேரத்தில் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள்.

9.5.2025 வெள்ளி
கிடாம்பியாச்சான் திருநட்சத்திரம்

கிடாம்பி ஆச்சான் ஸ்ரீஎம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மா சனாதிபதி களில் ஒருவர். ராமானுஜரின் தாய்மாமனான பெரிய திரு மலை நம்பி, கிடாம்பி ஆச்சான் அத்தையின் கணவர் என்று குரு பரம்பரையில் உள்ளதால் ஒரு வகையில் இவர் ராமானுஜருக்கு உற வினர் ஆகின்றார். பெரிய திருமலை நம்பி தான் கிடாம்பி ஆச்சானை ராமானுஜரிடம் சீடராக அனுப்பி வைத்தார். ராமானுஜர் மீது பேரன்பு உடையவர். முக்கியமான அவருடைய ஆரோக்கியத்தில் இவர் மிகுந்த கவனம் வைத்திருந்தார். ஆகையினால் தனிப்பட்ட முறையில் அவருக்கு உணவு தயார் செய்து படைக்கும் மடைப்பள்ளித் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நம்மாழ்வாரின் திருவிருத்தம் பிரபந் தத்திற்கு இவர் தனியன் அருளிச் செய்திருக்கிறார்.

The post இந்த வார விசேஷங்கள்!! appeared first on Dinakaran.

Read Entire Article