உலகில் எத்தனையோ உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், நாம் மிகவும் மதிக்கத்தக்க, ஒரு உயிரினமாக இருப்பது பசு. இந்திய மரபு வழி ஆன்மிகத்தில் (இந்து மதத்தில்) பசுவுக்கு உயர்ந்த இடம் உண்டு. நடைமுறை வாழ்க்கையிலும் அதை இன்றளவும் பின்பற்றித்தான் வருகின்றார்கள். தாய்க்குச் சமமாக பசுவும், தாய்ப்பாலுக்குச் சமமாக பசுவின் பாலும் இருப்பதால், பசுவை “கோமாதா’’ என்று வணங்குகின்றோம். பசு இருக்கும் இடத்தில், மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். பூ, புவ, சுவ, மஹர், ஜன, தபோ, சத்யலோகம் ஆகிய ஏழு லோகங்கள் உருவாவதற்கான சுரப்புகள் காமதேனுவில் (பசு) இருந்து வெளி வருகின்றன, எனவே படைப்பு உருவாக்கம் பசுவின் வடிவமாகவே வேத மந்திரங்களில் கருதப்படுகிறது.
“வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!’’
– என்பது தமிழ் ஞான சம்பந்தர் வாக்கு.
அது வெறும் பேச்சல்ல அந்த காலத்தில் பசு என்றாலே செல்வம் என்றுதான் பொருள். ஒரு பசுமாடு இருந்தால், அது அந்தக் குடும்பத்தைத் தாய்போல காப்பாற்றிவிடும். பசுவின் தியாகத்துக்கு இணையாக வேறு ஒரு உயிரினத்தைச் சொல்ல முடியாது. அந்தக் காலத்தில், குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதைப் போலவே, பசுவுக்கும் பெயரிட்டு குழந்தைகளைப் போலவே வளர்த்தார்கள். இல்லை இல்லை.. பசுதான் பல குடும்பங்களை வளர்த்தது. நம்முடைய தெய்வங்களும், வழிபாடும், பசுவுடன் இணைந்துதான் இருக்கும். கண்ணன் கோபாலனாகக் காட்சி தருகின்றார். சிவபெருமானோ, ரிஷப வாகனத்தில் காட்சி தருகின்றார். மன்னார்குடி ராஜகோபாலன், தேரழுந்தூர் ஆமருவியப்பன் என பல கோயில்களில் பசுவும் கன்றும் சேர்ந்து பகவான் காட்சி தருகின்றார்.அதைப் போலவே, சிவாலயங்களில் பிரதோஷத்தில் பசுவின் வாகனமாகிய நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதை நாம் பார்க்கின்றோம். பகவானுக்கு கோவிந்தன், கோபாலன் என்றெல்லாம் பெயர். அந்தப் பெயரைத்தான் அவன் அதிகம் விரும்புகின்றான். கிருஷ்ணாவதாரத்தில் அவன் பசுக்களை மேய்த்த சந்தோஷத்தில் வைகுண்டத்தில்கூட பசுவுடன் இருக்க ஆசைப்பட்டான் என்பதை ஆழ்வார் ‘‘திவத்திலும் பசு நிரை மேய்த்தி” என்று பாடி இருக்கின்றார்.
பசு என்பது நம் ஆன்மாவைக் குறிப்பது. சைவசமயத்தில் முப்பொருள் உண்மை என்று ஒரு விஷயம் உண்டு. அதில், பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருள்களைச் சொல்வார்கள். இதில் பதி என்பது, இறைவனையும், பசு என்பது ஜீவாத்மாவையும், பாசம் என்பது தளை எனும் மும்மலங்களையும் குறிக்கும். இந்தத் தளை நீங்கிவிட்டால், பதி பசு இவை இரண்டும் ஒன்றை ஒன்று ஆட்கொண்டு இணைந்துவிடும். ஒவ்வொரு நாளும் நாம் பார்க்க வேண்டிய அஷ்ட மங்கலங்களில் ஒன்றுதான் பசு. காலையில் எழுந்து பசுவின் முகத்தில் விழித்துவிட்டால், அன்றைக்கு மிகுந்த அதிர்ஷ்டம்தான் என்று சொல்வார்கள். கோயில்களில் விடிகாலை சுப்ரபாதச் சேவையில் பசுவையும் கன்றுவையும் பகவான் முன் நிறுத்துவார்கள்.அதைப் பார்த்தபின்தான் நம்மை பகவான் பார்ப்பார். (தரிசனம் தருவார்) இந்த பூஜை நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். ஸ்ரீரங்கத்தில் விடிகாலை, பகவானுக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகின்றது. இதை ஒரு காட்சி யாக தொண்டரடிபொடியாழ்வார் சொல்கின்றார்.
“வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ
தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.’’
பகவானைப் பார்ப்பதற்காக தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் எனப் பலரும் திரண்டு இருக்கின்றார்கள். அப்பொழுது பகவானோடு உள்ள பசுக்களுக்கு அவர்கள் வாயுறை, அதாவது சாப்பிடுவதற்கு மணமிக்க அறுகம்புல்லை மற்ற பூஜைப் பொருளோடு எடுத்து வந்து சமர்பித் தார்களாம். காலை சுப்ரபாதச் சேவைக்கு கோயிலுக்கு போகும் போது, கோ சாலையில் உள்ள பசுமாடுகளுக்கோ, அல்லது வீதியில் பார்க்கும் பசுமாடுகளுக்கோ வாயுறை (உணவு) வழங்க வேண்டும். பசுவின் உடலில் 33 கோடி தேவர்களும் இருப்பதாக நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசுவை வணங்கிவிட்டால் அத்தனை தேவதைகளையும் ஒரே இடத்தில் வணங்கியதாகப் பொருள். பசுவினுடைய பின்பகுதியில் மகாலட்சுமி இருப்பதாகச் சொல்வார்கள்.அது வேறு ஒன்றும் இல்லை. பசு நமக்கு அடுத்தடுத்து கன்று போட்டு செல்வத்தை வளர்க்கிறது. ஒரு பசுமாடு சரியாகப் பராமரித்தால், விரைவில் அது பல மாடுகளைக் கொடுக்கிறது. அது செல்வவிருத்தி. செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. எனவே பசுவின் பின்பகுதியில், செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி இருப்பதாக ஒரு அடையாளம் சொன்னார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் பசு மாட்டின் தரிசனம் இணைந்துதான் இருக்கின்றது. எந்த வழிபாடாக இருந்தாலும், கோ பூஜை செய்யாமல் துவங்கமாட்டார்கள்.
பெரும்பாலும் ஆலயங்களில் செய்கின்ற பூஜைக்கும், வீட்டில் செய்கின்ற பூஜைக்கும், வேறுபாடு உண்டு. ஆனால், இந்த கோபூஜையைப் பொறுத்தவரை, ஆலயங்களிலும் கோ பூஜை செய்துதான் மற்ற பூஜையைத் துவங்குவார்கள். வீட்டில் புதிதாக ஒரு செயலைச் செய்கின்ற பொழுது கோ பூஜை செய்து துவங்குகின்றோம். இதனால் அத்தனை தேவதைகளும் மகிழ்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள். கிரகப்பிரவேசம் மணிவிழா மற்றும் நம் வீட்டில் நடக்கக்கூடிய அத்தனை சுபநிகழ்ச்சிகளிலும் கோபூஜை செய்வது சிறப்பு.இது தவிர, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோபூஜை செய்வது சிறப்பான பலனைத் தரும். வருடத்தில், கோ பூஜை செய்வதற்குரிய சில தினங்கள் உண்டு. புரட்டாசி மாதத்தில் வரும் அனந்த விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கோ வத்ச துவாதசி, கோஷ்டாஷ்டமி, கபிலா சஷ்டி, கோகுலாஷ்டமி, மாட்டுப் பொங்கல் முதலிய தினங்களில் அவசியம் கோபூஜை செய்ய வேண்டும்.வீட்டில் செய்யாவிட்டாலும், கோசாலை இருக்கக்கூடிய கோயில்களுக்குச் சென்று, பசுமாடுகளை வணங்கி கீரை, பழம் முதலிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். இதனால் பல்வேறு தோஷங்கள் நீங்கும். திருமூலர் நான்கு காரியங்களைச் செய்யச் சொல்லுகின்றார்.
1. நீங்கள் கோயிலுக்குச் செல்லுகின்ற பொழுது இறைவனுக்கு ஏதேனும் ஒரு கைப் பொருள் கொண்டு செல்லுங்கள். இறைவனிடம் இல்லாத பொருள் எதுவும் இல்லை என்றாலும்கூட நன்றி தெரிவிக்க ஒரு பச்சிலையாவது (வில்வம், துளசி) கொண்டு செல்லுங்கள்.
2. அதற்கடுத்தது, ஒரு பசு மாட்டுக்கு ஒரு வாய் தீனி தாருங்கள்.
3. மூன்றாவதாக சாப்பிடுகின்ற பொழுது, ஒரு பிடி சோறு மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சாப்பிடுங்கள்.
இவைகள் எதுவும் செய்யவில்லை என்றாலும்கூட பிறரைப் பார்க்கின்ற பொழுது, அவச்சொல் பேசாது, உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும்படியான இனிமையான சொற்களைப் பேசுங்கள். இந்தச் செயல்கள் நாம் அழைக்காமலேயே மகாலட்சுமியை நம் வீட்டுக்கு வரவழைத்து விடும்.
The post இந்த நான்கு காரியங்களையும் அவசியம் செய்யுங்கள்! appeared first on Dinakaran.