
கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது,
கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் மோசமாக விளையாடியுள்ளோம். இங்கு நிறைய வீரர்களைப் பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம், ஆனால் இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. அவர்களின் பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அழுத்ததில் வைத்ததுடன் சிறப்பாக விளையாடினார்கள்.
மேலும், அவர்களின் பந்துவீச்சானது இந்த மைதானத்தில் எங்களின் வாய்ப்பை மேலும் கடினமாக்கியது. இந்த சுற்றுப்பயணத்தில் சில சிறந்த நினைவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். அதுமட்டுமில்லாமல் அவர்களின் விருந்தோம்பலை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும், நல்ல கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.