ரோம், மே 15: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நேற்று, அமெரிக்க வீராங்கனைகள் பேடன் ஸ்டியர்ன்ஸ், கோகோ காஃப் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள், இத்தாலியின் ரோம் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்ஸ், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா மோதினர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய பேடன், 2ம் செட்டில் கோட்டை விட்டார். இருப்பினும், கடும் சவாலாக இருந்த 3வது செட்டை பேடன், போராடி வசப்படுத்தினார். அதனால், 6-2, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்ற பேடன், அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவுடன் மோதினார். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய காஃப்புக்கு, 2வது செட் கடும் சவாலாக இருந்தது. இருப்பினும், அதையும் அவரே வசப்படுத்தினார். அதனால், 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் வென்ற காஃப் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில்அல்காரஸ்
இத்தாலி ஓபன் ஆடவர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஜாக் அலெக்சாண்டர் டிரேப்பர், ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் மோதினர். இப்போட்டியில் இரு செட்களையும் எளிதில் கைப்பற்றிய அல்காரஸ், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ் அசத்தலாக ஆடிய காஃப் அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.