* பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் நம்பர் 1, தமிழ்நாட்டிற்காக எனது பயணம் தொடரும்
சென்னை: பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கிறோம். தமிழ்நாட்டிற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பகுதி-1 தான். 2026-ல் 2.0 வெர்ஷன் தொடங்கும். அதில் இன்னும் சாதனைகளை படைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் நவீன வலைப்பின்னல் அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்யவும், துறைகளுக்கு இடையே தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வசதியைப் பெறவும் இயலும். சைபர் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களையும் கட்டுப்படுத்தி வருகிறோம். ஓய்வில்லாமல், விழிப்புணர்வோடும், கண்காணிப்போடும் களத்தில் இருக்கும் காவல்துறையினரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
காவல்துறையினரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான ஐந்தாவது காவல் ஆணையம் 934 பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அதில் 86 பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. மேலும் 274 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, மற்றவை அரசின் பரிசீலனையில் உள்ளன.
பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வு முறையிலே தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை பட்டியலானது சமூகநீதி அடிப்படையிலே இருந்து வந்த நிலையிலே கடந்த 2019ம் ஆண்டு வரப்பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்டரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும்.
அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை விட ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை அனைத்து துறைகளிலும் செய்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே நம்பர் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கிறோம். இந்த உறுதியோடும் – மக்கள் மேல் உள்ள நம்பிக்கையோடும் சொல்கிறேன், அடமானம் வைக்க நினைப்பவர்களாலும் – அபகரிக்க நினைப்பவர்களாலும் தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது.
சட்டமன்றத்தில் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். அடுத்தபடியாக மாநில சுயாட்சி கனவையும் நிறைவேற்ற குழு அமைத்திருக்கிறோம். என் பயணம் தொடரும். தமிழ்நாட்டிற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பகுதி-1 தான். 2026-ல் வெர்ஷன் 2.0 லோடிங். அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு. இவ்வாறு அவர் பேசினார்.
* செப்டம்பர் 6ம் தேதி இனி காவலர் நாளாக கொண்டாட்டம்
சட்டம் ஒழுங்கை காப்பற்றி இரவு பகலும் கண் துஞ்சாது காவல் பணியில் ஈடுபட்டு, பொது அமைதியை பாதுகாக்கும் காவலர்களுக்கென தனி நாளை கொண்டாடுவதற்காக, காவலர்களின் சேவையை போற்றி பாராட்டிட முதன் முதலாக 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல்துறையின் சிறப்புகளை சொல்லக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்துதல், குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அன்று நடைபெறும் என முதல்வர் கூறினார்.
* ‘காலனி’ என்ற சொல் நீக்கம்
இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியக்கூடிய வெளிநாடு தொழிலாளர்கள் அனைவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்படுகிறார்கள் என்று முதல்வர் கூறினார்.
The post இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பாகம் 1; 2026ல் 2.0 தொடங்கும் எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கிறோம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.