இது மிகவும் சிறப்பான வெற்றி - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

8 hours ago 3

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

மிகவும் சிறப்பான வெற்றி இது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நாங்கள் இதே மைதானத்தில் 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றோம். அந்தப் போட்டியில் ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதனால் எனக்கு ஒரு உள்ளுணர்வு தோன்றியது. இன்றைய ஆட்டத்திலும் ஆர்ச்சர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது. இதன் காரணமாக நான் காலையிலேயே ஆர்ச்சர் கையில் பந்தை கொடுக்க முடிவெடுத்தேன்.

நேற்று பிரைடன் கர்ஸ் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்த பிறகும் எனக்கு ஜோப்ரா ஆர்ச்சர் தான் காலையில் பந்து வீச வேண்டும் என்று உள்ளுணர்வு இருந்தது.சில சமயம் நமது உள்ளுணர்வு சிறப்பாக செயல்படும். ஆர்ச்சர் அணிக்கு திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவருடைய பந்துவீச்சு ஆட்டத்துக்குள் வந்தவுடன் மிகப்பெரிய மாற்றத்தை போட்டி சந்தித்தது. எங்களுக்கு மிகவும் முக்கியமான விக்கெட்டுகளை அவர் வீழ்த்திக் கொடுத்திருக்கின்றார்.

நாட்டுக்காக பந்துவீசி விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை தேடி தருவது என்பது மிகவும் உன்னதமான விஷயம். பஷீருக்கு ஒரு விரல் உடைந்து இருந்தது. அதையும் மீறி அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் ஈடுபட்டார். ஆல்ரவுண்டராக எனக்கு டெஸ்ட் போட்டியில் நான்கு முறை அணியின் வெற்றிக்காக செயல்பட வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவும் வாய்ப்பு கிடைக்கும். அதை தவறவிட்டால் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் நான் ரிஷப் பண்டை ரன் அவுட் செய்ததும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நான் பந்து வீசிய உத்வேகத்துடன் பீல்டிங்கில் நின்று கொண்டிருந்ததால் என் கைக்கு பந்து வந்தவுடன், நான் ரிஷப்பை ரன் அவுட் செய்தேன். பண்ட் எவ்வளவு பெரிய அபாயகரமான வீரராக இருப்பார் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவரை ஆட்டம் இழக்க வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அடுத்த நான்கு நாட்கள் ஓய்வில் இருப்போம். அதன் பிறகு நான்காவது டெஸ்டுக்கு தயாராகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article