
பெங்களூரு,
18-வது ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் தலா 37 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், "பிட்ச் கொஞ்சம் தந்திரமாக இருந்தது. அதில் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்டது பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க உதவியது. விக்கெட் கீப்பிங் செய்வதால் என்னால் பந்து எப்படி வருகிறது என்பது போன்ற விஷயங்களை கண்டறிய முடிகிறது. அது முழுவதும் ஒரே வேகத்தில் இருந்தது.
அங்கே எனது ஷாட்டுகள் பற்றி எனக்கு தெரியும். அதைப் பின்பற்றி அசத்த எனக்கு நல்லத் தொடக்கம் மட்டுமே தேவை. ஆரம்பத்திலேயே அதிரடியாக தொடங்கி அங்கிருந்து அசத்துவது முக்கியம். ஒருவேளை நான் சிக்சர் அடிக்க முயற்சித்தால் அதை எங்கு அடிக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். விக்கெட் கீப்பராக இருப்பது எப்படி மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுகிறார்கள், அவர்கள் எப்படி விக்கெட்டை இழக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அதிர்ஷ்டவசமாக எனது கேட்ச்சை தவற விட்டார்கள்.
இது என்னுடைய வீடு. என்னுடைய மைதானம். அது மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு நன்றாக தெரியும். இங்கு விளையாடுவதை ரசித்தேன்" என்று கூறினார்.