
சென்னை,
'பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை' போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்தநிலையில் மாரி செல்வராஜ் அளித்த ஒரு பேட்டியில், அடுத்து தனுஷுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும், அந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. ''இது என்னுடைய கனவு படம்; அந்த படத்தை இயக்கி வெளியிடுவதற்கு குறைந்தது ஒன்றறை ஆண்டுகள் தேவைப்படும்'' என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'ராயன்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை தனுஷ் இயக்கி வருகிறார். அதன் பின்னர், இவர் கதாநாயகனாக நடித்த 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார். அதன் பின்னரே, அவர் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் சேர்ந்து இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சரித்திரக் கதையில் நடிக்காத தனுஷ் புதிய கதைக்குள் செல்வது அவருடைய ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.