சென்னை : அதிமுக – பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா கூறினார். கூட்டணி அரசு என கூறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், அமைச்சர்கள் மீது அதிமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு,”தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது. இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது” என சபாநாயகர் பதில் அளித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு ஏன் என்று விளக்கிப் பேசினார். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேளிகளும் கேட்கப்பட்டது. அதில் கூட்டணி தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக – அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். மீண்டும் அவர் தெளிவுபட டெல்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என்று கூறினார். கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்களாகவே ஏதாவது பொருள் தேடாதீர்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளதால் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும். இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post “இது எங்கள் கட்சி..நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்..”: எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.