இது இந்தியா வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் - இந்திய முன்னாள் கேப்டன்

7 hours ago 3

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது ஜேமி சுமித் - ஹாரி புரூக் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இது இந்தியா வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் போட்டி என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்தும் பாராட்டியுள்ள கங்குலி தனது எக்ஸ் பக்கத்தில், "கில்லிடமிருந்து ஒரு முழுமையான மாஸ்டர் கிளாஸ். இதில் எந்த குறைபாடுகளும் இல்லை. இது எந்த சகாப்தத்திலும் இங்கிலாந்தில் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. கடந்த சில மாதங்களில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர் இடம் அவருடையது கிடையாது என்பது போல தெரிகிறது. இது இந்தியா வெற்றி பெற வேண்டிய டெஸ்ட்" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article