இதயத்தை காக்க… தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டம்: 10,500 பேருக்கு இதய பாதுகாப்பு மருந்துகள் விநியோகம்

3 months ago 23

* அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ.க்கு சுகாதார நடைபாதை அமைப்பு, 4 கோடி பயனாளிகளுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தத்திற்கு தொடர் சேவை

சென்னை: மனித உடலின் பிரதான அங்கமாக விளங்குவது இதயம். ஒவ்வொருவரின் இதயத்தையும் பாதுகாப்பது அவரவர்களின் கைகளில்தான் உள்ளது. இருப்பினும், தற்கால வாழ்க்கை முறையினால் மனிதனின் இதயம் மிகவும் பலமிழந்து உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி மக்கள் இதய நோயினால் இறக்கின்றனர்.

இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% ஆகும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதயக் கூட்டமைப்பு சார்பில் ‘உலக இதய தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில், இதயத்தை பாதுகாக்கவும் மிகவும் பயனுள்ள திட்டத்தை மாநில சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பைத் தடுக்கும் பொருட்டு “இதயம் காப்போம் திட்டம்” தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டு இதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு, நோய் உறுதி செய்யப்பட்டு சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி இதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த முன்னோடி திட்டத்தின் மூலம் 10,474 நபர்கள் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் 613 நபர்களும் இதுவரை பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் இதயவியல் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாகவும், குறிப்பாக ‘மக்களை தேடி மருத்துவத் திட்டம்’ மூலம் 4 கோடி மக்கள் தொடர் சேவைகளை பெற்று வருதாக பொதுசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:

தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பாக இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக தமிழ்நாடு அரசின் முதன்மை திட்டமான ‘மக்களை தேடி மருத்துவ திட்டம்’ தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று இதய நோய் பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக விளங்கும் பொதுவான தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கான மருந்துகள் அவர்களின் இல்லங்களிலேயே வழங்குதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரை போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து கடந்த 22ம் தேதி மாநில அளவில் 1,94,97,544 (சுமார் 2 கோடி) பயனாளிகள் முதன்முறை சேவைகளையும் 4,15,57,680 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர்.

மேலும் இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பைத் தடுக்கும் பொருட்டு “இதயம் காப்போம் திட்டம்” தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டு இதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு, நோய் உறுதி செய்யப்பட்டு சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி இதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 10,474 நபர்கள் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் 613 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் இதய நோய் பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கும் உடற்பயிற்சி இன்மையை கருத்தில் கொண்டு “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் கொண்ட சுகாதார நடைபாதை கண்டறியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சுகாதார நடைபாதைகளில் நடைப்பயிற்சி, தொற்றா நோய், இதய நோய் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கொண்ட வாசகங்கள் வைக்கப்பட்டு மக்களின் அத்தியாவசியமான தேவைகளும் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோன்று இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், இதய நோய் பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க வழிவகை செய்கிறது. இந்த உலக இதய நாளில் நாமும் நமது இதயம் சார்ந்து செயல்பட்டு மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் என உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இதயத்தை காக்க… தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டம்: 10,500 பேருக்கு இதய பாதுகாப்பு மருந்துகள் விநியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article