இதன் காரணமாகவே அஸ்வின் ஓய்வு அறிவித்திருக்கலாம் - இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து

3 weeks ago 5

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரியவர். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

அப்படிப்பட்ட அவர் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் பிளேயிங் 11-ல் இடம் பெறும் அஸ்வினுக்கு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து வாய்ப்பளிப்பதில்லை.

மேலும் ஓய்விற்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அஸ்வின் அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவு பலருக்கும் ஏமாற்றம் அளித்திருந்தது.

அதேவேளையில் அவரது ஓய்வுக்கான காரணம் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் அஸ்வின் ஓய்வினை அறிவிக்க என்ன காரணம்? என்பது குறித்து தான் கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது,

"ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது அஸ்வினை இந்திய அணி புறக்கணித்தது அவருக்கு மனதில் வலியை உண்டாக்கி இருக்கலாம். ஏனெனில் அனுபவ வீரரான அவரை தவிர்த்து இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும். அதனால் அவர் மனதளவில் பெரிய வேதனையை அடைந்திருப்பார்.

இதற்கு முன்பே ஜடேஜா வெளிநாடுகளில் அவருக்கு பதிலாக அதிகமாக விளையாடி இருந்தாலும் அப்போதெல்லாம் அவர் பாதிக்கப்பட்டதாக நான் உணரவில்லை. ஆனால் தற்போது வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டது நிச்சயம் அவருக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கலாம். இதன் காரணமாகவே அவர் இனி வளரும் வீரர்களுக்கு வழி விட எண்ணி ஓய்வை அறிவித்திருக்கலாம்" என்று கூறினார்.

Read Entire Article