சைபர் கிரைம் மோசடியானது ஏதோ தனி ஒரு நபரால் நடத்தப்படுவது அல்ல. இதன் பின்னணியில் உலக அளவில் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வருகின்றது. சைபர் கிரைம் மோசடியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் அதிநவீனமானவை. அவற்றை அடையாளம் கண்டு முறியடிப்பது என்பது இன்றைக்கு பெரும் சவாலானதாகவே உள்ளது. உலகின் வளர்ந்த வல்லரசு நாடுகளும், பெருநிறுவனங்களும் இணைய மோசடியால் பாதிக்கப்படும்போது, சாதாரண தனிநபர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. இணைய மோசடி என்பது இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது. பணமில்லா பரிவர்த்தனைக்கு நாம் மாறிய பிறகு அனைவருமே இந்த மோசடியால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு இணையவழி குற்றங்கள் அதிகரித்தபடி இருக்கின்றன. ஹேக்கிங் வகையான மோசடிகளை தாண்டி, பாலியல் தொந்தரவு, மத ரீதியாக வெறுப்பை பரப்புதல், அவதூறு பரப்புதல், பிறரின் அந்தரங்கங்களை வெளியிடுவதாக பிளாக்மெயில் செய்வது போன்ற செயல்பாடுகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. 2016ம் ஆண்டு கணக்கின்படி 12,317 இணையவழி குற்றங்கள் பதிவாகின. இதுவே 2020-ம் ஆண்டில் 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ‘இணைய பாதுகாப்புக்கான போர்’ என்ற கருப்பொருளில் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 250 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட இணைய பாதுகாப்பு நிபுணர்கள் உரையாற்றினர்.
குறிப்பாக பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 7.9 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் நடப்பாண்டில் இணையவழி நிதி மோசடி குற்றங்களின் மூலம் ரூ.1,100 கோடிக்கு மேல் பணம் பறிப்பு நடந்துள்ளது. இந்த இழப்புகள் இணைய பாதுகாப்பை நாம் மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாகவும், தமிழ்நாடு டிஜிட்டல் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என்பதோடு, சைபர் குற்றங்களை எதிர்த்து போராட உலக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து பயணிக்க தமிழ்நாடு தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டில் உறுதியளித்துள்ளார்.
பெருநிறுவனங்கள் சைபர் குற்றங்களை தடுக்க, பெரும் முதலீடு செய்து வருகின்றன. சாமானியர்கள் தங்களுக்கு அத்தகைய பாதுகாப்பு முறைகளை உருவாக்குவது சாத்தியமில்லை. எனவே, நம் எல்லைக்கு உட்பட்டு நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது நம் கையில்தான் உள்ளது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், இ-மெயிலில் வரும் சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை தவிர்ப்பதன் மூலம் சைபர் கிரைம் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். மோசடியாளர்கள் இருக்கும் வரை மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். இது ஒவ்வொரு காலத்திற்கும், தொழில்நுட்ப மாற்றத்திற்கும் ஏற்ற வகையில் மாறிக் கொண்டேதான் இருக்கும்.
The post இணையதள ஆபத்து appeared first on Dinakaran.