
உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்மார்ட் போன்ககள் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க தொடங்கியது முதல் சமூக வலைத்தளங்களும் செல்போன்களை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. ட்விட்டர் (தற்போது எக்ஸ்) , பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகள் இல்லாத ஸ்மார்ட்போன்களை பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இணைய வசதி மூலமாக இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள், இதன் மூலம் அழைப்புகளும் மெசேஜ்களும் அனுப்ப முடியும். இவை அனைத்திற்கும் இணைய வசதி கட்டாயம் என்று உள்ள நிலையில், இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலியை உருவாக்கியுள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்ஸி. இவர் உருவாக்கியுள்ள புதிய செயலியின் பெயர் ( BitChat) 'பிட்சாட்'. சாதாரண இணைய சேவை இல்லாமல், ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெசேஜ்களை அனுப்பும் வசதி இந்த செயலியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிட் சாட் செயலியின் சங்கிலித் தொடர்பு (Mesh Networking) மூலம் செயல்படும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சாதாரணமாக நாம் ப்ளூடூத் மூலம் ஒரே இரண்டு சாதனங்களையே இணைப்போம். ஆனால் இங்கு பல சாதனங்களை நேரடி சங்கிலியாக கட்டமைத்து, மெசேஜ்கள் பல்வேறு சாதனங்களின் வழியாக பயனரிடம் சென்று சேரும். உதாரணமாக, உங்கள் மொபைலில் இருந்து பக்கத்து நபரின் மொபைல் வழியாக மற்றொரு நபருக்கு மெசேஜ் செல்லும். இதனால், தொலைதூரம் இருந்தாலும் ப்ளூடூத் எல்லையை மீறி மெசேஜ் அனுப்ப முடியும். இயற்கை பேரிடர் காலங்கள், இணையசேவை கிடைக்காத பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது சோதனை அடிப்படையில் பிட் சாட் செயலி உள்ளது. ஆப்பிள் ஐபோனின் டெஸ்ட் பிளைட்டில் மட்டுமே இது கிடைக்குமாம்