‘‘பணி ஓய்வுக்கு பின்னாடியும், சம்திங் வாங்கும் மாஜி செக்ரட்ரி பற்றி பரபரப்பா பேசப்படுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பாடி என்ற பெயர் கொண்ட ஊர் ஆட்சி இருக்குது.. இங்க தொடக்க கூட்டுறவு வங்கி செயல்படுது.. இந்த வங்கியில செக்ரட்ரியா ஒருத்தரு பணிபுரிஞ்சு, ஓய்வு பெற்றிருக்குறாராம்.. அவரு பணி மட்டும்தான் ஓய்வாம், ஆனா, இன்னமும் அவர் சொல்றதுதான் அங்க நடக்குதாம்.. அவர் பணி செய்த காலத்துல தனக்கு வேண்டியவங்களுக்கு ஜிக்ஜாக் வேலை செஞ்சி கடன் அதிகமா வழங்கியிருக்குறாராம்..
அதோடு, மகளிர் குழுவினருக்கு வழங்குன கடனிலும் கடன் தொகைக்கு ஏற்ப சம்திங் வாங்கியிருக்குறாராம்.. இதேபோல அடமான நகைகள் ஏலம் விடுறபோதும், கவர்மென்ட் நிர்ணயிச்ச 85 சதவீதத்திற்கு கீழே ஏலம் விட்டு கவர்மென்டுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்குறதா புகார் எழுந்திருக்குது.. பணி ஓய்வுக்கு அப்புறமாகவும், அங்க பணிபுரியுற 2 பேர் மூலம் சம்திங் வாங்கிக்கிட்டு நினைத்ததை ெதாடர்ந்து சாதித்தும் வர்றாராம்.. இந்த பூனைக்கு மணிகட்டுறது யாருங்கிற விஷயம் தான் கூட்டுறவு வட்டாரத்துல பரபரப்பா பேசப்படுது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரரிடமே பில்டப் விடுறாராமே மாவட்ட செயலாளர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் ஆயில் என ஆரம்பிக்க கூடிய பெயரை கொண்டவர் மட்டுமே இருந்து வருகிறாராம்.. மாவட்டத்தில், இவர் தான் அனைத்தையும் கவனித்துக் கொள்வதாக தேனிக்காரர் நினைக்கிறராம்… ஆனால் அந்த நிர்வாகியும் சிங்கிலாக தான் மாவட்டத்தில் வலம் வருகிறாராம்.. கட்சியில் உள்ள நிலவரம் குறித்து யாரிடமும் எதுவும் வாய் திறப்பது கிடையாதாம்… தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டுனு அவர் இருந்து வருகிறாராம்.. அவ்வப்போது தேனிக்காரரை தொடர்பு கொள்ளும் மாவட்ட செயலாளர், மாவட்டத்தில் நமது அணி தான் சிறப்பாக செயல்படுதுன்னு பில்டப் விடுவார் என தேனிக்காரர் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இணைப்பு தலைவர்களின் கூட்டணியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வர்றாராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டர் பீட்டர மாமா. ‘‘இலைக்கட்சியில் இருந்து விரட்டி விடப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அரசியலில் நாம் மாஜியாகிவிடுவோம் என்ற எண்ணத்துடன் இலைக்கட்சி தலைவரை 6 மாஜிக்கள் போய் சந்திச்சாங்க.. ஆனால் நான் தலைவராக இருக்கும் வரை சேர்ப்பது என்பது இயலாத காரியம் என அடிச்சி சொல்லி திருப்பி அனுப்பிட்டாராம்.. இதனால சமயம் வரும் வரை காத்திருப்போம்னு மாஜிக்கள் கீழ் வேலைகளில் ஈடுபட்டு வர்றாங்களாம்.. மாஜிக்களின் இணைப்பு சந்திப்பு குறித்து இதுவரை யாரும் மறுக்கல.. ஆனால் இலைக்கட்சி தலைவருக்கும், முக்கிய ரெண்டாங்கட்ட தலைவர்களுக்கும் இடையேயான மோதல் நீறுபூத்த நெருப்பாகவே இருக்காம்.. இதனை உடைக்கும் வகையில் இலைக்கட்சி தலைவர் புதிய டெக்னிக்கை கையாண்டுக்கிட்டு இருக்காராம்.. தனக்கு எதிராக இருக்கும் தலைகளுக்கிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தி அவர்களை பிரித்துக்கொண்டு வருவதோடு, கட்சிக்குள் எந்த மோதலும் இல்லை. எனது சொல்படிதான் அனைவரும் கேட்டுக்கிட்டு இருக்காங்க என்பதை உலகுக்கு காட்டும் வேலையில் ஈடுபட்டிருக்காராம்.
இதற்காக, தனது நிழலானவரை வைத்து அனைத்து வேலைகளையும் செய்றாராம்.. மாங்கனி புறநகர் மாவட்டத்துல 4 தொகுதியில செயல்வீரர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய சொல்லி, அதில் இணைப்பதில் முக்கிய இடத்தில் இருக்கும் கொங்குகாரர், முட்டை மாவட்டத்துக்காரர், அதியமான் மாவட்டத்து மாஜி ஆகியோரை அழைக்க உத்தரவு போட்டிருக்காரு.. இவ்வாறு இவர்களை வைத்து கூட்டத்தை நடத்தினால் தலைவர் பின்னாடிதான் எல்லோரும் இருக்காங்கன்னு கட்சிக்காரங்களுக்கு சொல்லத்தான் இந்த ஏற்பாடாம்.. ஆனால் நிழலானவர் அழைப்பை ஏற்றுக்கொண்டு வரும் மாஜிக்கள், தங்களின் இணைப்பு திட்டத்தை பற்றி வாய்திறக்காமல், இலைக்கட்சி தலைவர் நல்லவர் வல்லவருன்னு கூவிட்டு போயிடுறாங்களாம்.. எத்தனுக்கு எத்தன் எல்லா ஊரிலும் இருப்பான். இலைக்கட்சி தலைவரின் ஆசையை அவர்கள் நிராசையாக்கிட்டு போறாங்கன்னு இணைப்பை விரும்பும் ரத்தத்தின் ரத்தங்கள் அடிச்சி சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தேர்வு பெற்று சென்னையில் நடந்த போட்டிகளில் பங்கேற்க சென்றவர்களுக்கு பயண கட்டணமாக ரூ.1600, உணவுக்கு ரூ.225 ஒதுக்கி இருக்காங்க.. ஆனால் கடைக்கோடி மாவட்டத்தில் தடகளம், ஹாக்கி, புட்பால் விளையாட்டு வீரர்களுக்கு பயண செலவாக ரூ.500 மட்டும் கொடுத்து ‘இவ்வளவுதான் உண்டு’ என்ற ரீதியில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்களாம்.. அவ்வாறு சென்னை சென்ற மாணவிகள் பிற மாவட்ட விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு மொத்தம் ரூ.1825 கிடைத்ததாக சொல்ல, விஷயம் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு புகாராக சென்றுள்ளது.. சென்னை சென்ற விளையாட்டு வீரர்களுக்கு உரிய கட்டணத்தை வழங்க வேண்டும்னு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறக்க, திரும்பி வந்ததும் மீதி பணத்தை தந்து விடுகிறோம்னு விளையாட்டு அலுவலக தரப்பில் இருந்து கூறினார்களாம்..
இவை ஒருபுறம் இருக்க சென்னைக்கு மாணவிகளை அழைத்து சென்ற மகளிர் கோச் ஒருவர் போட்டி முடிந்து திரும்பிய மாணவிகளுடன் தனது கணவரையும், மகனையும் அனுப்பி வைத்தாராம்.. அவர்கள் திருச்சிக்கு ரயில் வந்ததும், தனது சொந்த வேலையாக அங்கு இறங்கி சென்று விட்டனராம்.. மாணவிகளுக்கும் சேர்த்து எடுத்த ரயில் டிக்கெட்கள் அனைத்தும் அவர் வசம் இருக்க மதுரையில் சோதனை செய்து டிடிஇ மாணவிகளை இறக்கி விட்டுள்ளார். மாணவிகள் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தவிச்சியிருக்காங்க.. பின்னர் வேறு டிக்கெட் எடுத்து வேறு ரயிலில் சொந்த ஊர் வந்து சேர்ந்தார்களாம்.. சில அதிகாரிகள் இப்படி நடந்துகொண்டால் விளையாட்டு வீரர்கள் என்ன செய்வார்கள்னு பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post இணைப்பு தலைவர்களின் கூட்டணியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.