சென்னை: "இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அந்தப் பணிகளுக்காக காத்திருக்கும் தேர்வர்களிடையே ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.