‘‘ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடிய சீக்கிரம் எலக்சன் நடக்க போகுது.. நிலைமையெல்லாம் எப்பிடி இருக்கு..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆளுங்கட்சி கூட்டணி எலக்சனை சந்திக்க தயாரா இருக்கறாங்க.. இந்த முறையும் கூட்டணிக்கு ஒதுக்குமா அல்லது ஆளுங்கட்சியே போட்டியிடுமான்னு இன்னும் சில நாட்களில் தெரியும். இலைக்கட்சி தரப்புல என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியாம திணறிகிட்டு இருக்காங்களாம்.. கும்மிடிப்பூண்டி பார்முலாவை கட்சி தலைமை அமல்படுத்த வாய்ப்பு இருக்கும்னு சொல்றாங்க.. கட்சி இப்ப இருக்கிற நிலைமைக்கு தேர்தலை புறக்கணிச்சா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்னு மேற்கு மண்டல சீனியர்கள் நினைக்கிறாங்களாம்.. மேற்கு மண்டலத்துலத்துல தான் நம்ம கட்சி வலுவா இருக்கு.. அங்கேயே புறக்கணிச்சா பெரிய அளவுல சேதாரத்தை சந்திக்க வேண்டி இருக்கும்னும், இது அடுத்த வருடம் நடக்கிற சட்டசபை எலக்சனில் கடுமையா பாதிக்கும்னு இலை கட்சியோட மேற்கு மண்டல சீனியர்கள் நினைக்கிறாங்க.. இலை கட்சியோட மூவ் என்னன்னு பார்த்துகிட்டு நம்ம முடிவு எடுக்கலாம்னு பூ கட்சி வெயிட்டிங்ல இருக்கு.. இலை புறக்கணிச்சா நாம நின்னு 2வது இடத்திற்கு வந்திடலாம்னு கணக்கு போடுறாங்க.. பூ நேரடியா நின்னா டெபாசிட் கூட தேறாது என்பதால கூட்டணியில இருக்கிற சைக்கிளை ஓடவிட்டு இலைகட்சியோட ஓட்டுக்களையும் ஈஸியா வாங்கிடலாம்னு திட்டம் போட்டுகிட்டு இருக்காங்க.. பூ கட்சியை பொறுத்தவரை எலக்சன்ல ஜெயிக்கிறது பத்தி எல்லாம் டாபிக் இல்லையாம்.. இந்த ரிசல்ட் வெச்சு இலையை எப்படி சுருட்டி, மிரட்டி 2026ல் கூட்டணி வைக்கலாம்ங்கிறது தானாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்யாணராணி பற்றி பேசிய பேச்சாளரை வீட்டோடு சுற்றி வளைத்ததோடு இலைக்கட்சி தலைவரை வரவேற்க கூட போக முடியாதபடி கொலை மிரட்டல் விடுத்தாராமே மகளிரணி நிர்வாகி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மகளிரணியினர் ஆட்டம் அதிகரித்து போச்சாம்.. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு, இலைக்கட்சியின் மாநகர மகளிரணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதாம்.. இதற்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த மகளிரணி நிர்வாகியோ, இலைக்கட்சி தலைவர் மாங்கனி நகருக்கு வரும்போதும், போகும்போதும் முன்வரிசையில் நின்று வணக்கம் போடுவாராம்.. இவரது வேகம் ஏற்கனவே உள்ள மகளிருக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்துமாம்.. இந்நிலையில், கோவையில் சமீபத்தில் பல ஆண்களை ஏமாற்றி மேரேஜ் செஞ்ச கல்யாணராணியை பிடிச்சாங்களாம்.. அப்பெண்ணோ மாங்கனி புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவராம்.. இந்த புகழ் வாய்ந்த கல்யாணராணியை, இலைக்கட்சியில் சேர்த்து பொறுப்பு வாங்கி தருவதாக கூறி, இலைக்கட்சி தலைவரை பார்க்க அழைச்சிக்கிட்டு வந்திருக்காரு பெண் நிர்வாகி. கல்யாணராணி லிப்ஸ்டிக் ஸ்டைலை பார்த்தவுடன் கட்சிக்காரங்க ரொம்பவே ஷாக்காகித்தான் போனாங்களாம்.. யாரு யாருன்னு கேட்டு அழைச்சிட்டு வந்த மகளிரணியை துளைத்தெடுத்திட்டாங்ளாம் இலைக்கட்சி நிர்வாகிகள். கல்யாணராணி கைதான விவரத்தை, இலைக்கட்சிக்காரரின் வீட்டு பக்கத்தில் இருந்து பேச்சாளர் ஒருவர் பேசிக்கிட்டிருந்தாராம்.. இதனால் கோபமடைந்த அந்த மகளிரணி நிர்வாகியோ, அந்த பேச்சாளரை செல்போனில் வறுத்தெடுத்திட்டாராம்.. அதோடு நிற்காமல் அவரோட வீட்டுக்கு மூன்று பேர் சென்று சுற்றி வளைச்சிட்டாங்களாம்.. இதனை சற்றும் எதிர்பாராத பேச்சாளரு வீட்டை பூட்டிக்கிட்டு யாராவது காப்பாத்துங்கன்னு சத்தம் போட்டிருக்காரு.. இந்த அதிர்ச்சியில இருந்து இன்னும் அவர் வெளியே வரலையாம்.. இலைக்கட்சி தலைவரை வரவேற்க கூட அவரால தைரியமா செல்லமுடியாத நிலையில, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டுக்கு வந்து அவமானப்படுத்திய மகளிரணி நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்குங்கன்னு கண்ணீர் கடிதம் ஒன்றை எழுதியிருக்காராம்.. அந்த பேச்சாளருக்கு நீதி கிடைக்குமான்னு மாநகர மகளிரணி நிர்வாகிகள் காத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரரை நம்பி ‘ப விட்டமின்’ இழந்ததுதான் மிச்சம் என்று புலம்பும் நிர்வாகி ஒருத்தர் புத்தாண்டுக்கு பிறகு முக்கிய முடிவு எடுக்கப் போறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் ஆயிலை அடைமொழியாக கொண்டவர் இருந்து வருகிறார். தேனிக்காரர் மீண்டும் பவர்புல்லாக வந்து விடுவார். அதனால் தமது கை டெக்ஸ்டைல் மாவட்டத்தில் ஓங்கி விடும் என்ற கனவில் இருந்து வருகிறாராம்.. இதை நம்பி தன்னிடம் இருந்த ப விட்டமினை இரைத்து விட்டாராம்.. ஆனால், தேனிக்காரர் இவரை கண்டுகொள்ளவே இல்லையாம்.. கட்சியில் சேராமல் இருந்திருந்தால் தன்னிடம் ப விட்டமின் இருந்திருக்குமே என புலம்பி வருகிறாராம். புத்தாண்டுக்கு பிறகு, முக்கிய முடிவு எடுக்க அவர் முடிவு பண்ணிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சபைக்கு எதிராக திரளும் சுயேச்சைகளால் பரபரப்பு ஏற்பட்டிருக்காமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘புதுச்சேரியில் சபையின் முதன்மையானவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கடிதத்தை எந்த கட்சியையும் சாராத ஒரு பிரதிநிதி அளித்திருப்பது ஆளும் தரப்புக்குள் சலசலப்பை அதிகப்படுத்தி உள்ளதாம்.. தன்னிச்சையாக அந்த சுயேச்சையானவர் கடிதம் கொடுத்தாலும் அதன் பின்னணியில் ஆளும் தரப்பு அதிருப்தி பிரதிநிதிகள் சிலர் இருக்கலாம் என தகவல் கசிந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றிய ஆளும் தரப்பு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அங்காளமானவர் சபையின் நாயகருக்கு எதிராக மற்றொரு மனுவை அளித்ததோடு வெற்றி பெறுவோம் என்று மார்தட்டியுள்ளாராம். இதுதவிர மற்றொரு பிரதிநிதியையும் மனு கொடுக்க தயார்படுத்தி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாராம்.. வரலாற்றில் முதன்முதலாக தற்போதுதான் இதுபோன்று சபையின் முதன்மையானவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதால் அடுத்தடுத்த தேர்தல் நகர்வுகளை நோக்கி புதுச்சேரி அரசியல் களம் நடைபோடுகிறதோ என்ற எதிர்பார்ப்பில் எதிர்க்கட்சிகள் விழிப்போடு காத்திருக்கிறதாம்.. இதற்கு கடந்த காலத்தில் நடந்த பல்வேறு அரசியல் நையாண்டி கூத்துக்களை பேச்சாளர்கள் நினைவூட்டி வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post இடைத்தேர்தலை முன்வைத்து புது கணக்கு போடும் தாமரை பார்ட்டியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.