இடுக்கி அருகே கேரள அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

1 day ago 2

கேரளா: இடுக்கியில் கேரள மாநில கேஎஸ்ஆர்டிசி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்து, நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த ராமமோகன் (55), அருண் ஹரி (40) சங்கீதா (45), பிந்து (50) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே கேஎஸ்ஆர்டிசி (KSRTC) பேருந்து ஒன்று 34 பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், புல்லுப்பாறை அருகே இன்று காலை பேருந்து வளையும் போது, எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரமாகப் போராடி விபத்தில் சிக்கிக் காயமடைந்த நபர்களை மீட்டுள்ளனர். இந்த கோர விபத்தில், மாவேலிக்கரைப் பகுதியைச் சேர்ந்த இரு ஆண்களும், இரண்டு பெண்களும் என நான்கு பேர் உயிரிழந்ததும், கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் மட்டும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், அரசு பேருந்தினை வாடகைக்கு எடுத்து, கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட நபர்கள் தஞ்சாவூருக்குச் சுற்றுலா சென்றதும், சுற்றுலா முடிந்து பயணிகள் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விபத்து எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post இடுக்கி அருகே கேரள அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article