சென்னை,
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திருமாவளவன் என்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என கூறியுள்ளார். நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம். அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா?.
கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம்.
திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா?. தமிழக கவர்னர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது வெறும் யூகங்கள்தான். தமிழக கவர்னர் சிறப்பாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.