மும்பை,
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசித்தனர். கேப்டன் ரோகித் சர்மாவும் பங்கேற்றார். இதன் முடிவில் பிற்பகல் 3 மணியளவில் 15 பேர் கொண்ட அணி பட்டியலை இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.
அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணிக்கு துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்திய அணி விவரம் பகல் 12.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அணித்தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்றதால் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கேப்டன் ரோகித் மற்றும் அஜித் அகர்கர் சுப்மன் கில்லை நியமிக்க விரும்பியுள்ளனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய கம்பீர் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் தேர்வுக்குழு மற்றும் ரோகித், ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளனர். இதன் காரணமாகவே இந்திய அணியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா.