இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வலைதளங்கள் மூலம் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்

2 months ago 14

சென்னை: இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வலைதளங்கள் மூலம் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சருக்கு நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் தயாநிதி மாறன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மும்பையில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வதாக வந்த புகார்கள் தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், இதுபோன்ற கருப்புச் சந்தைகளின் நடவடிக்கைகளால் உண்மையான நுகர்வோர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகிப் பாதிப்படைகின்றனர்.

எனவே இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கைகளை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய நிதியமைச்சருக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் டிக்கெட் விற்பனை மோசடிகள் குறித்த பரவலான செய்திகளைத் தொடர்ந்து அதிக தேவையுள்ள பொருட்களின் மீதான அளவற்ற லாபம், மறுவிற்பனை குறித்து முழுமையான மற்றும் அவசர விசாரணைத் தேவை. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை அங்கீகரிக்கப்படாத வலைதளங்களின் மூலம் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகளின் விலையாக ரூ.2,500 முதல் ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பிறகு அதிகாரப்பூர்வமற்ற தளங்கள் மூலம் ரூ.3,00,000 வரை மறுவிற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் டிக்கெட் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு அழைக்கப்பட்டார். மேலும் கடந்த 2023ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகப் கோப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகியவற்றின் போதும், இதே போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. அப்போதும் அதிகாரப்பூர்வதளங்களில் டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்து பின்னர் மறுவிற்பனையாளர் வலைதளங்களில் உயர்த்தப்பட்ட விலையில் விற்பனைத் தொடங்கியது.

டிக்கெட் விற்பனைத் தளங்களுக்கும், கருப்புச் சந்தையைச் சார்ந்தவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளைத் தான் இதுகாட்டுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், அது நுகர்வோர் நம்பிக்கையினைக் கெடுத்துவிடும் என்று கவலை மேலோங்குகிறது. மேலும் இது Anti Scalping சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும், அதிக தேவையுள்ள பொருட்களின் விற்பனையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும், வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அவசியம். தனிக்குழுக்கள் அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை தடுக்க ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி. கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வலைதளங்கள் மூலம் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article