முல்தான்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி 5 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்துள்ளது. முல்தான் கிரிக்கெட் அரங்கில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அப்துல்லா ஷபிக், சைம் அயூப் இணைந்து இன்னிங்சை தொடங்கினர்.
அப்துல்லா 7 ரன், கேப்டன் ஷான் மசூத் 3 ரன் எடுத்து ஜாக் லீச் பந்துவீச்சில் வெளியேற, பாகிஸ்தான் 19 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், சைம் அயூப் உடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் கம்ரான் குலாம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அயூப் 97 பந்தில் அரை சதம் அடிக்க, குலாம் 104 பந்தில் 50 ரன் எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 149 ரன் சேர்த்தனர். அயூப் 77 ரன் (160 பந்து, 7 பவுண்டரி) விளாசி அவுட்டாக, அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த முகமது ரிஸ்வான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, கம்ரான் குலாம் தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. குலாம் 118 ரன் (224 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சோயிப் பஷிர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்துள்ளது (90 ஓவர்). ரிஸ்வான் 37 ரன், சல்மான் ஆஹா 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 2, பாட்ஸ், கார்ஸ், பஷிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் பாகிஸ்தான் நிதான ஆட்டம் appeared first on Dinakaran.