
லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நின்றனர்.
இந்த சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 8 ரன்களில் அவுட்டானார்.
இதனையடுத்து கே.எல்.ராகுல் - பண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தி இந்திய அணி முன்னிலையை வலுப்படுத்தினர். இந்த ஜோடியில் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரைசதம் கடந்த பிறகும் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களில் கே.எல்.ராகுல் முதலில் சதமடித்து அசத்தினார். சிறிது நேரத்திலேயே பண்டும் சதம் விளாசி அசத்தினார். தற்போது வரை இந்திய அணி 70 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் அடித்து 272 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ராகுல் 113 ரன்களுடனும், பண்ட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.