நாக்பூர்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களமிறங்கினர். இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இருப்பினும் ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரோகித் ஆரம்பம் முதலே ரன் அடிக்க முடியாமல் தடுமாறினார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வரும் அவர், இந்த போட்டியிலாவது ரன் குவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் மீண்டும் சொதப்பிய அவர் 7 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
தற்போது வரை இந்திய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் அடித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களுடனும், கில் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.