
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த அணியில் இளம் வீரர்களான சாய் சுதர்சன், ரஜத் படிதார், ஸ்ரேயார் ஐயர் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
ரோகித் சர்மா இல்லாத போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்பட்டு வந்தார். கடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போதும் முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியை பும்ரா வழிநடத்தினார். ரோகித் ஓய்வுக்கு பின்னர் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா ஒரு வீரராக மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம் அதிரடி தொடக்க வீரரான சுப்மன் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கில் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சுப்மன் கில் இந்திய ஒருநாள் அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக கில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.