
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.
இதனிடையே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி புதிய கேப்டன் தலைமையில் களமிறங்க உள்ளது. இது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மற்றும் புதிய டெஸ்ட் கேப்டன் வரும் 23-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.