
லண்டன்,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 20ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சீனியர் வீரர்களான ரோகித், விராட் ஓய்வு பெற்றுவிட்டதால இளம் வீரரான சாய் சுதர்சன், கருண் நாயர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணியில் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
வித்தியாசமான சவால்களை அளிக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடவுள்ளது மிகவும் உற்சாகமாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கேற்றவாறு தங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அணியில் புதிய ஆற்றல் இருப்பது நல்ல விஷயம். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அணியில் திறமையான இளம் வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகமளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்றுவது எப்போதும் சிறப்பான விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரைக் கைப்பற்றினால், அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.