![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39268215-ind3-0.webp)
அகமதாபாத்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் டாம் பாண்டன் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 38 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்த தொடரில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களுக்கு சவால்கள் இருக்கும் என்பது தெரியும். எங்கள் மீது எறியப்படும் எந்த சவாலையும் சமாளிப்பதற்காகவே நாங்கள் களத்திற்கு வருகிறோம். என்னுடைய விக்கெட்டை எடுத்த (மார்க் வுட்) பவுலருக்கு வாழ்த்துகள். சில நேரங்களில் நீங்கள் முதல் பந்தை தவறவிட்டாலும் இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழப்பீர்கள்.
இந்த தொடரில் நாங்கள் எதுவும் தவறாக செய்ததாக தெரியவில்லை. சில விஷயங்களில் முன்னேறுவதை பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அதைப்பற்றி நான் இங்கே நின்று விவாதிக்கப் போவதில்லை. எங்களுடைய வீரர்கள் எங்களது விவாதங்களில் கச்சிதமாக இருக்கிறார்கள். எனவே எங்களுடைய அணிக்குள் தொடர்ச்சியாகத் தகவல் தொடர்பை தெளிவாக வைத்திருப்பதே எங்கள் வேலை.
திறன் பற்றி எதுவும் விவாதிப்பதற்கு இல்லை. கண்டிப்பாக சாம்பியன் அணியாக இருக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற விரும்புவார்கள். நாங்கள் அடித்த ஸ்கோரில் மகிழ்ச்சி. எங்கள் அணியில் விளையாடும் விதத்தில் கொஞ்சம் சுதந்திரம் இருக்கிறது. கடந்த உலகக்கோப்பை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாங்கள் தொடர விரும்புகிறோம். அதைப் பின்பற்றும்போது சில நேரங்களில் வெற்றி நம் பக்கம் விழாது. ஆனால் அது பரவாயில்லை" என்று கூறினார்.