![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/01/36941271-skyw.webp)
புனே,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா மற்றும் துபே தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் மக்மூத் 3 விக்கெட்டும், ஓவர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் இரு ஆட்டத்தில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி கண்டிருந்தன.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன சூரியகுமார் யாதவ் கூறுகையில், "உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை இந்த போட்டியின்போது வழங்கி இருந்தார்கள். இந்த போட்டியின் ஆரம்பத்தில் 10 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர்.
ஒரே ஓவரில் மூன்று விக்கெட் விழுவதெல்லாம் கொஞ்சம் மோசமானதுதான் இருந்தாலும் அனுபவ வீரர்களான ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அவர்களது அனுபவத்தை இந்த போட்டியில் வெளிக்காட்டி இருந்தனர். மேலும் அவர்களது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி நகர முடிந்தது. இந்த போட்டியில் அடைந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது" என்று கூறினார்.