
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். லோகேஷ் ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் 184 ரன்கள் அடித்ததன் மூலம் ஜேமி சுமித் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன் குவித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஜேமி சுமித் - 184 ரன்கள்
2. அலெக் ஸ்டீவர்ட் - 173 ரன்கள்
3. ஜானி பேர்ஸ்டோவ் - 167 ரன்கள்
4. அலெக் ஸ்டீவர்ட் - 164 ரன்கள்
5. ஜோஸ் பட்லர் - 152 ரன்கள்