ஊட்டி, ஏப். 29: இ-பாஸ் நடைமுறையால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இம்முறை வழக்கத்தை காட்டிலும் குறைந்தே காணப்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக, கோடை காலங்களில் சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இச்சமயங்களில் குளு குளு காலநிலையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை மொய்ப்பது வழக்கம். இதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால், ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டும். அதேபோல், அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழியும்.
அனைத்து வியாபாரிகளுக்கும் வியாபாரம் அமோகமாக காணப்படும். சுற்றுலா தொழிலை நம்பி தொழில் செய்து வருபவர்களுக்கு இவ்விரு மாதங்கள் போன்ஸ் மாதங்களே.
அதேபோல், சுற்றுலா பயணிகள் வாகனங்களால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்படும். இதனை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்படுவார்கள். பொதுவாக, நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுக்க அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இவ்விரு மாதங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால், இவ்விரு மாதங்களில் ஆகும் வியாபாரத்தை வைத்தே பல வியாபாரிகள் தங்களது குழந்தைகளின் கல்வி கட்டணம், மருத்துவம் உட்பட பல்வேறு செலவுகளை தீர்மானிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கோடை காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளால் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்ற காரணத்தை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் இ பாஸ் முறையை அறிமுகம் ெசய்ய வேண்டும் தமிழக அரசை அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இ பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. இ-பாஸ் நடைமுறைக்கு வந்த பின், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கியது. பொதுவாக, ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு பின், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயரும். ஆனால், இம்முறை சுற்றுலா பயணிகள் வரை தற்போது வரை குறைந்தே காணப்படுகிறது. வழக்கத்தை காட்டிலும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
அதேபோல், பெரும்பாலான சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ள நிலையில், பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் முழுமையாக அறகைள் புக்கிங் ஆவதில்லை. அதேபோல், சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வருபவர்களுக்கும் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை என்று புலம்பி வருகின்றனர்.
The post இ-பாஸ் நடைமுறையால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது appeared first on Dinakaran.