இ-பாஸ் நடைமுறை; தமிழக அரசு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்!

20 hours ago 2

சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தபடி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதை ஏற்று, அரசின் மறு ஆய்வு மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞரும் ஆஜராக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

 

The post இ-பாஸ் நடைமுறை; தமிழக அரசு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்! appeared first on Dinakaran.

Read Entire Article