கான்பெர்ரா,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தொடங்க இருந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி நாளான இன்று பயிற்சி ஆட்டம் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது.அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரதமர் லெவன் அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய முன்னணி பந்துவீச்சாளரான பும்ரா ஒரு ஓவர் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்தது,. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர்.இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.