மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வரும் 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. தற்போது இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியின் பிரதான சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) முதல் சுற்றில் தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியை சந்திக்கிறார். 10 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதலாவது ஆட்டத்தில் 'வைல்டு கார்டு' மூலம் களம் இறங்கும் 133-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவாரெட்டியை எதிர்கொள்ள உள்ளார்.
உலகின் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோவுடனும், 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்றுள்ள பிரான்சின் லூகாஸ் பொய்லியுடனும் மோத உள்ளனர். இதேபோல் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் டெல்யர் பிரிட்ஸ், சக நாட்டை சேர்ந்த ஜெனசன் புரூக்ஸ்பியையும், 6-ம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ஜாமி முனாரையும் சந்திக்க உள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான அரினா சபலென்கா, 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்சுடன் தனது பயணத்தை தொடங்குகிறார்.
அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தனது முதல் ஆட்டத்தில் சக நாட்டவரான சோபியா கெனினுடன் மோதுகிறார். 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) செக்குடியரசின் கேத்ரினா சினியாகோவாவையும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலின் கார்சியாவையும் (ஜெர்மனி) சந்திக்கின்றனர்.