
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 11 ரன்களிலும், ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரமுடன் ஆயுஷ் பதோனி கை கோர்த்தார். இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களில் மார்க்ரம் 66 ரன்களிலும், பதோனி 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் அப்துல் சமத் (10 பந்துகளில் 30ரன்கள்) அதிரடியாக விளையாடி லக்னோ அணி வலுவான நிலையை எட்ட உதவினார். குறிப்பாக சந்திப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். அவர் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி, 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 8 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதையடுத்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்த நிலையில், ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால்(74 ரன்கள்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரியான் பராக்(39 ரன்கள்) விக்கெட்டையும் ஆவேஷ் கான் வீழ்த்தினார்.
இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் பந்துவீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில், ஷிம்ரான் ஹெட்மேயர் 12 ரன்களில் கேட்ச் ஆனார். 20-வது ஓவரில் ஆவேஷ் கான் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் ஆவேஷ் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.