சென்னை,
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக, சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதுடன், நீலகிரி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சில ரெயில்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, பயணிகள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். தற்போது அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்துள்ளனர். குறிப்பாக, இரவு 9 மணிக்கு வர வேண்டிய ரெயிலானது 12 மணியை கடந்தும் வரவில்லை. இதனால் மழை மற்றும் குளிருக்கு நடுவே பயணிகள் மிகுந்த அவதியை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, "நாங்கள் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறோம். கேட்டால், ரெயில் வருவது குறித்து அறிவிப்பு செய்யப்படும் என்கிறார்கள். இதுவரை அறிவிப்பு செய்யப்படவில்லை. ரெயில் வருமா என்றே தெரியவில்லை. ஒருவேளை ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டால் நள்ளிரவு நேரத்தில் நாங்கள் எப்படி வீட்டிற்கு செல்ல முடியும்? பெண்கள், குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். ரெயில்கள் குறித்த அறிவிப்பை தெளிவாக தெரிவிக்க வேண்டும்." என்றனர்.